ஒரே நாளில் 1 தங்கம், 2 வெள்ளி; பாரா ஆசிய விளையாட்டில் தமிழக வீராங்கனை துளசிமதி சாதனை
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் ஒரே நாளில் மூன்று பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அவர் ஒரே நாளில் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். பாரா பேட்மிண்டன் தொடரில் இவரது இந்த வெற்றி இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இரட்டையர் பிரிவு
மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தல்
பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளான மனாஸி ஜோஷி மற்றும் துளசிமதி முருகேசன் இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
பரபரப்பான இறுதிப்போட்டியில் சீனாவின் யாங் கியூக்ஸியா மற்றும் சியாவ் ஜுக்ஸியான் இணையை 21-16, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.
இந்த அபார வெற்றியின் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு பதக்கம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றையர் பிரிவு
மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்
முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் துளசிமதி முருகேசன் சீனாவின் கியுக்சியா யாங்கை எதிர்கொண்டார்.
இரண்டு செட்கள் வரை நீடித்த இந்த போட்டியில் 18-21, 11-21 என்ற கணக்கில் தீவிரமாக போராடி தோல்வியடைந்தார்.
இருப்பினும், தங்கம் வெல்லும் வாய்ப்பு நூலிழையில் கைநழுவினாலும், இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
ஒற்றையர் பிரிவிலும் இவரது ஆட்டம் அனைவரது பாராட்டையும் பெற்றது.
கலப்பு இரட்டையர்
கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம்
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி கூட்டணி இந்தோனேசியாவின் லியானி, ரம்தானி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் சுற்றை 21-11 எனக் கைப்பற்றிப் பலமான தொடக்கத்தைக் கொடுத்த போதிலும், அடுத்தடுத்த சுற்றுகளை 19-21, 14-21 எனக் கோட்டை விட்டு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
இந்த வெற்றியுடன் இந்தியா 23 தங்கம் உட்படப் பல பதக்கங்களுடன் பட்டியலில் 5-வது இடத்தில் நீடிக்கிறது.