பாங்காங் உறைந்த ஏரி மராத்தான்: உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்பு
லடாக்கில் உள்ள பாங்காங் உறைந்த ஏரி மராத்தானின் இரண்டாவது பதிப்பில் ஏழு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். 'உலகின் மிக உயர்ந்த உறைந்த ஏரி மராத்தான்' என்று அழைக்கப்படும் லடாக்கின் பாங்காங் உறைந்த ஏரி மராத்தான் இரண்டாவது பதிப்பு பிப்ரவரி 20 அன்று நடந்தது. லடாக்கின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை, லடாக் நிர்வாக யூனியன் பிரதேசம் மற்றும் இந்திய ராணுவத்தின் 14 கார்ப்ஸின் ஆதரவுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 21 கிமீ மற்றும் 10 கிமீ என இரண்டு பிரிவுகளில், 120 ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். விளையாட்டுத்துறைச் செயலர் ரவீந்தர் குமார், சுஷுல் தொகுதி கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்.
புவி வெப்படைதலை குறிக்கும் மாரத்தான்
இந்த மாரத்தான் ஓட்டத்தின் நோக்கம், புவி வெப்பமடைதலின் தாக்கத்தால் உறைந்த பாங்காங் ஏரியின் மீது நடத்தப்படும் கடைசி ஓட்டமாக இது இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. "திஸ்ட்ரன்" என்ற தலைப்பில் இமயமலைப் பனிப்பாறைகள் விரைவாக உருகுவதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவது இந்த மாரத்தான் ஓட்டத்தின் குறிக்கோள். அதே நேரத்தில், சங்தாங் போன்ற இடங்களில் குளிர்கால சுற்றுலாவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சுஷுலின் கவுன்சிலர் குறிப்பிட்டுள்ளார். 14,273 அடி உயரத்தில், கடுமையான பனிப்பொழிவுகளுக்கு இடையே இந்த ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது அங்கே நிலவிய வெப்பநிலை -15 ° C ஆகும். அதிகாரப்பூர்வமாக இது உலகின் கடினமான மாரத்தான்களில் ஒன்றாகும்.