பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்கு கூண்டோடு கலைப்பு; பயிற்சியாளர் பதவிக்கு விரைவில் வேட்டு?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன் பதவியில் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு உதவி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அந்த அணியின் தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிசிபி தலைவர் ஜகா அஷ்ரஃப், செவ்வாய்க்கிழமை முன்னாள் யூனிஸ் கானுடன் அவசரக் கூட்டத்தை நடத்தி முடிவை அறிவிப்பார் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
பாகிஸ்தான் தேர்வுக்குழு முழுமையாக கலைப்பு
2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஏமாற்றமான காட்சிக்குப் பிறகு, முழு தேர்வுக் குழுவையும் நீக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக, அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கலும் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த இன்சமாம்-உல்-ஹக் வீரர்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கி அவரும் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட பலரும் நீக்கப்படுவார்கள் எனக் கூறப்படுவதால், பாகிஸ்தான் கிரிக்கெட் முழுமையாக மாறுதலுக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.