காமன்வெல்த் போட்டிகள் நிறைவு: பாகிஸ்தான் வீரா் குத்ரத்துல்லா உட்பட பல வீரா்கள் மாயம்
செய்தி முன்னோட்டம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 நிறைவடைந்த நிலையில், போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் பாக்சிங் வீரர் குத்ரத்துல்லா மற்றும் உகாண்டா நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உட்பட பல விளையாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் தாயகம் திரும்பாமல் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைத் தேடும் பணியை ஸ்காட்லாந்து காவல்துறையும், உள்துறை அமைச்சகமும் தொடங்கியுள்ளன. குத்ரத்துல்லாவின் கடவுச்சீட்டு அணி மேலாளரிடம் இருந்தபோதிலும் அவர் காணாமல் போயுள்ளார். அதேவேளையில், சிறந்த பயிற்சி வசதிகளுக்காக உகாண்டா வீரர்கள் பிரிட்டனில் புகலிடம் கோரத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தலைமறைவு
பாஸ்போர்ட் இருந்தும் தப்பிய பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் அணியின் குத்துச்சண்டை வீரர் குத்ரத்துல்லாவின் பாஸ்போர்ட் அணி மேனேஜரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையிலும், அவர் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து மாயமாகியுள்ளார்.
அணி நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்தபோது அவர் அறையில் இல்லை என்பது தெரியவந்தது.
கடந்த 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியின்போதும் பாகிஸ்தான் வீரர்கள் சுலைமான் பலோச், நசீர்உல்லா கான் ஆகிய இருவர் பாஸ்போர்ட் மேனேஜரிடம் இருந்த நிலையில் மாயமாகினர்.
உகாண்டா வீரர்கள் நிலை
அரசியல் தஞ்சம் புக முயலும் உகாண்டா வீரர்கள்
இதேபோல உகாண்டா நாட்டின் 6 பேர் கொண்ட குத்துச்சண்டை அணியில் நுஹு பாட்டே, ஏஞ்சல் கடூஷாபே, இப்ராஹிம் கெமிஸ், எமிலி நகலேமா ஆகிய 4 வீரர்கள் செவ்வாய்க்கிழமை தாய்நாடு திரும்பும் விமானத்தில் ஏறவில்லை.
மேன்மையான பயிற்சி வசதிகள் மற்றும் வாய்ப்புகள் காரணமாக ஸ்காட்லாந்தில் அரசியல் தஞ்சம் புக திட்டமிட்டுள்ளதாக மாயமான வீரர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடரும் சம்பவங்கள்
காவலத்துறை விசாரணை
காமன்வெல்த் போட்டிகள் முடிந்த பின் வீரர்கள் மாயமாவது இது முதல் முறையல்ல.
2018 ஆஸ்திரேலிய கோல்ட் கோஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு சுமார் 50 வீரர்கள் வெளியேறாமல் இருந்ததும், 190 பேர் தஞ்சம் கோரி விண்ணப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மாயமான வீரர்களைக் கண்டறிய ஸ்காட்லாந்து காவலத்துறை, இங்கிலாந்து உள்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது.