இதே நாளில் அன்று : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி அறிமுகமான தினம்
2007 ஆம் ஆண்டு இதே நாளில், புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிமுகமானார். 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் பெற்ற படுதோல்வியை அடுத்து, அதே ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் மூத்த வீரர்கள் ஓரம்கட்டப்பட்டு இளம் வீரர்கள் எம்எஸ் தோனி தலைமையில் களமிறக்கப்பட்டனர். அந்த தொடரில் ஸ்காட்லாந்திற்கு எதிரான இந்தியாவின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், செப்டம்பர் 14 இதே நாளில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் எம்எஸ் தோனி முதன்முறையாக கேப்டனாக களம் கண்டார். அந்த போட்டி டையில் முடிந்த நிலையில், அப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பவுல் அவுட் முறையில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற எம்எஸ் தோனி
இளம் வீரர்களுடன் களமிறங்கி இந்திய கிரிக்கெட் அணிக்காக முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதோடு, அந்த தொடரின் இறுதிப்போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றிவாகை சூடினார். இதன் மூலம் முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தார். 1983க்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தத்தளித்து வந்த இந்தியாவுக்கு இந்த வெற்றி நல்ல ஊக்கம் கொடுத்தது. மேலும், இந்த வெற்றி இந்தியாவில் டி20 கிரிக்கெட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றதோடு, 2008இல் ஐபிஎல் அறிமுகத்திற்கு வழிவகுத்தது. இதையடுத்து, 2011இல் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளையும் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக வெற்றியை பெற்றுக் கொடுத்து வரலாறு படைத்தார்.