INDvsNZ முதல் டெஸ்ட்; 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி; 36 ஆண்டுகால பெருமையை இழந்தது இந்தியா
பெங்களூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முன்னதாக, மழையால் அக்டோபர் 16 அன்று தொடங்கவிருந்த முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. எனினும், முதல் இன்னிங்சில் நியூசிலாந்தின் அபார பந்துவீச்சால் இந்தியா 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் மாட் ஹென்றி, வில்லியம் ஓ'ரூர்க் முறையே 5 மற்றும் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 356 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ராச்சின் ரவீந்திரா சதமடித்த நிலையில், டெவோன் கான்வே மற்றும் டிம் சவுத்தி அரைசதம் விளாசினர்.
நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு
முதல் இன்னிங்சில் மோசமாக விளையாடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் மீண்டு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி அரைசதம் விளாசிய நிலையில், சர்ஃபராஸ் கான் தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் சதத்தை அடிக்கும் வாய்ப்பை இழந்து 99 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி இறுதியில் 462 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 107 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 8 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில், போட்டியின் ஐந்தாவது நாளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
36 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
இந்த போட்டிக்கு முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள், இந்திய மண்ணில் 36 போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில் 17 போட்டிகள் டிராவில் முடிந்துள்ள நிலையில், 17 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது. முதல் வெற்றி 1969இலும், இரண்டாவது வெற்றி 1988இலும் அந்த அணி பெற்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவது வெற்றியை இந்திய மண்ணில் பதிவு செய்துள்ளது. மேலும், இதன் மூலம் இந்திய மண்ணில் 36 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாமல் இருந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.