டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலம் முதலிடம் : ஸ்டெபி கிராஃப் சாதனையை முறியடித்த ஜோகோவிச்
செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், ஆடவர் தரவரிசையில் 378வது வாரமாக முதலிடத்தில் இருந்ததன் மூலம், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஸ்டெஃபி கிராப்பின் சாதனையை முறியடித்துள்ளார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் மார்ச் 2021 முதல் ஆடவர் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருப்பதோடு, அதிக வாரங்கள் இருந்து உலகின் முதல்நிலை வீரராக இருந்து சாதனை படைத்துள்ளார். ஸ்டெபி கிராஃப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார். இவர்கள் தவிர மார்டினா நவ்ரதிலோவா 332 வாரங்களும், செரீனா வில்லியம்ஸ் 319 வாரங்களும், ரோஜர் பெடரர் 310 வாரங்களும் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளனர்.
நோவக் ஜோகோவிச் பற்றிய முக்கிய விவரங்கள்
ஏடிபியின் படி, ஏடிபி தரவரிசை வரலாற்றில் முதலிடத்தைப் பிடித்த 28 வீரர்களில் ஜோகோவிச்சும் ஒருவர் ஆவார். ஜோகோவிச் 2023 ஆஸ்திரேலிய ஓபனை வெல்வதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளின் அடிப்படையில் ஸ்பெயின் வீரர் நடாலை சமன் செய்தார். மேலும் அந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் தனது 93வது ஏடிபி டூர் பட்டத்தை வென்று, நடாலை பின்னுக்குத் தள்ளினார். நடால் 92 ஏடிபி டூர் பட்டத்தை வைத்துள்ளார். ஏடிபி டூர் பட்டத்தை பொறுத்தவரை தற்போது ஜோகோவிச்சை விட அதிகமாக 103 பட்டங்களுடன் ரோஜர் பெடரர் மட்டுமே முன்னிலையில் உள்ளார்.