ஆஸ்திரேலிய ஓபன் 2023 : பட்டத்தை வென்றார் ஜோகோவிச்! தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) ஆஸ்திரேலிய ஓபன் 2023 வென்றதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளின் அடிப்படையில் நோவக் ஜோகோவிச் ஸ்பெயினின் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் செர்பிய வீரரான ஜோகோவிச், கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை (6-3, 7-6, 7-6) நேர் செட்களில் வென்றார். இதன் மூலம் ஜோகோவிச் தனது 10வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். மேலும் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று, நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார். சிட்சிபாஸை வீழ்த்தியதன் மூலம் ஜோகோவிச், ஏடிபி தரவரிசையில் புதிய நம்பர் 1 ஆக உள்ளார். 373 வாரங்கள் உலக நம்பர் 1 ஆக சாதனை படைத்த ஜோகோவிச், ஜூன் 2022க்குப் பிறகு முதல் முறையாக முதலிடத்துக்குத் திரும்பியுள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் பெர்ஃபார்மன்ஸ்
ஜோகோவிச் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இதுவரை 341 வெற்றியும் 47 தோல்வியும் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில், ஜோகோவிச் 89-8 என்ற கணக்கில் வெற்றி-தோல்வி பெற்றுள்ளார். மேலும் 33 முறை கிராண்ட் ஸ்லாம் இறுதி போட்டிகளில் ஆடியுள்ள அவர், 22-11 என வெற்றி-தோல்வியைக் கொண்டுள்ளார். ஜோகோவிச் 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020, 2021, மற்றும் 2023 ஆம் ஆண்டு மெல்போர்னில் பட்டத்தை வென்றுள்ளார். மேலும், இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் தனது 93வது ஏடிபி டூர் பட்டத்தைப் பெற்று, 92 பட்டங்களை எடுத்த நடாலை பின்னுக்குத் தள்ளியுள்ளார். 103 பட்டங்களை கைப்பற்றிய ரோஜர் பெடரரை விட ஜோகோவிச் 10 மட்டுமே பின்தங்கி உள்ளார்.