இந்தியா vs ஆஸ்திரேலியா: மின்சார வசதியில்லாத ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் மைதானத்திலேயே நடைபெறவிருக்கிறது. இன்று
இரவு 6.30-க்கு டாஸும், 7 மணிக்கு போட்டியும் தொடங்கவிருக்கும் நிலையில், அந்தக் கிரிக்கெட் மைதானத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சார வசதி இல்லை என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆம், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ செயல்பட்டு வரும் இந்தியாவில் இருக்கும் ஒரு கிரிக்கெட் மைதானத்தில் அடிப்படை மின்சார வசதி கூட இல்லை.
2009ம் ஆண்டு முதல் இந்த கிரிக்கெட் மைதானத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கான பணத்தை மின்சார வாரியத்திற்கு செலுத்தாமல் இருப்பதே, இங்கு தற்போது மின்சார வசதி இல்லாமல் இருப்பதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
கிரிக்கெட்
மின்சார வாரியத்திற்கு செலுத்தப்படாத பணம்:
2009ம் ஆண்டுக்குப் பிறகு மின்சாரத்திற்கான பணத்தை செலுத்தாமல் இருந்ததன் காரணமாக, தற்போது ரூ.3.16 கோடி அந்த மைதானத்தின் பெயரில் மின்சார நிறுவனத்திடம் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார நிறுவனமானது இந்த மைதானத்திற்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்த ஐந்து ஆண்டுகள் கடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாமலேயே இந்த மைதானத்தில் ஆறு ஐபிஎல் போட்டிகள் மற்றும் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது.
ஆம், இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய ஒரு ஒருநாள் போட்டி இந்த மைதானத்திலேயே நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய டி20 போட்டியே இந்த மைதானத்தில் நடைபெறவிருக்கும் முதல் சர்வதேச டி20 போட்டியாகும்.
பிசிசிஐ
மின்சாரம் இல்லாமல் சர்வதேச போட்டிகள் எப்படி சாத்தியம்?
நிரந்தரமாக இல்லாமல் தற்காலிகமாக 200 KV வரையிலான மின்சார வசதியானது தற்போது இந்த மைதானத்திற்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக மின்சார வசதியை 1000 KV ஆக உயர்த்த விண்ணப்பம் அளிக்கப்பட்டு, அங்கீகரிக்கவும் பட்டிருக்கிறது. ஆனால், அதிகரிப்பதற்கான வேலைகள் இன்னும் துவங்கப்படவில்லை.
கிரிக்கெட் மைதானத்திற்கு முக்கிமயான ப்ளட்லைட்களை ஜெனரேட்டர் மூலமாகவே இயக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு, இதன் பராமரிப்புப் பணிகளானது பொதுப்பணித் துறையிடமும், இதர செலவுகள் விளையாட்டுத் துறையிடமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இரு துறைகளுமே மின்சாரத்திற்கான தொகையை செலுத்தாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்திருக்கின்றனர்.
இரு துறைகளுக்கும் பல்வேறு முறை மின்சார நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.