மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை படுதோல்வி! தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது. வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாதும் நிஷங்க அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்து தனது முதல் ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி, ஷிப்லி மற்றும் டேரில் மிட்செல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
போராடி வெற்றி பெற்ற நியூசிலாந்து
158 ரன்கள் எனும் எளிமையான இலக்காக இருந்தாலும், நியூசிலாந்து அணி 33வது ஓவர் வரை போராடி 4 விக்கெட்டுகளை இழந்து தான் இலக்கை எட்டியது. நியூசிலாந்து அணியின் வில் யங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் குவித்த நிலையில், ஹென்றி நிக்கோலஸும் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் நியூசிலாந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. முன்னதாக, இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நியூசிலாந்தில் பெற்ற தோல்வியுடன், 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.