ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி நிச்சயம்; நீரஜ் சோப்ரா நம்பிக்கை
அமெரிக்காவில் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற டயமண்ட் டிராபி ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ரா, அடுத்து நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். டயமண்ட் லீக் போட்டியில் கடந்த முறை பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்த முறை செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ஜிடம் முதலிடத்தை இழந்து தோற்றார். நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 83.30 மீட்டர் தூரத்திற்கு எறிந்த நிலையில், 84.24 மீட்டர் தூரத்திற்கு எறிந்து வாட்லெஜ் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய நீரஜ் சோப்ரா, இந்த சீசனில் தனக்கு இன்னும் ஒரு போட்டி இருப்பதாகக் கூறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி குறித்து நீரஜ் சோப்ரா பேட்டி
இந்த சீசனில் தனக்கு இன்னும் ஒரு போட்டியாக ஆசிய விளையாட்டுப் போட்டி உள்ளதாக நீரஜ் சோப்ரா தெரிவித்தார். இந்தியாவில் உள்ள இளம் விளையாட்டு வீரர்கள் மீது நீரஜ் சோப்ராவின் தாக்கம் வளர்ந்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உலகப் போட்டிகளில் இந்தியர்களும் வெற்றிபெற முடியும் என்று அனைவரையும் நம்ப வைத்ததாகக் கூறினார். மேலும், "ஒலிம்பிக் தங்கத்திற்குப் பிறகு, நாமும் வெல்ல முடியும் என்று அவர்களும் நம்புகிறார்கள். நான் புடாபெஸ்டில் தங்கம் வென்றேன். மேலும் இது இந்திய தடகளத்திலும் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார். பெரிய நிகழ்வுகளுக்கான தனது தயாரிப்பு பற்றி பேசிய அவர், போட்டி நடக்கும் நாளில், உடலை விட மனரீதியாக அதிகம் தயாராவதாக தெரிவித்தார்.