மீண்டும் ஆஸ்திரேலியாவின் முழுநேர கேப்டனாகிறாரா ஸ்டீவ் ஸ்மித்? அவரே கொடுத்த விளக்கம்!
இந்தூரில் இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் 3வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஸ்டீவ் ஸ்மித் அணிக்கு மீண்டும் அசத்தலான வெற்றியை பெற்றுக்கொடுத்தார். முன்னதாக பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. மேலும் நாக்பூர் மற்றும் டெல்லி டெஸ்ட்களில் மிக மோசமாக தோல்வியைத் தழுவினர். இதற்கிடையே பேட் கம்மின்ஸ் குடும்ப சூழ்நிலை காரணமாக நாடு திரும்பியதால், ஸ்மித் அணியின் கேப்டனானார். இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
கேப்டன் பொறுப்பை மறுக்கும் ஸ்டீவ் ஸ்மித்
2014 முதல் 2018 வரை ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் வழிநடத்தினார். ஆனால் 2018 இல் பந்தை சேதப்படுத்திய ஊழலில் அவர் ஈடுபட்டதை அடுத்து அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் மீண்டு வந்த ஸ்மித் அணியில் விளையாடி வருவதோடு, கேப்டன் இல்லாத சூழலில் மட்டும் அணியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்பது குறித்த ஊகங்களுக்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித், தான் மீண்டும் அணியின் முழு நேர கேப்டன் பொறுப்பை ஏற்க முடியாது என்றும், பேட் கம்மின்ஸ் தான் தங்களின் கேப்டன் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.