'அஸ்வினை சேர்த்திருக்கலாம்' : ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து முத்தையா முரளிதரன் கருத்து
அக்டோபரில் இந்தியாவில் தொடங்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் அக்சர் படேலை விட அஸ்வின் ரவிச்சந்திரனை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். மும்பையில், புதன்கிழமை (செப்டம்பர் 6) நடைபெற்ற முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் பேசிய முத்தையா முரளிதரன், இந்த வார தொடக்கத்தில் பிசிசிஐ வெளியிட்ட 15 பேர் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் அணி அறிவிப்பு தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். எனினும், அணியில் அஸ்வின் போன்ற திறமையான வீரர் சேர்க்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகக் கூறினார்.
இந்திய தேர்வுக்குழுவின் முடிவை ஆதரித்த முத்தையா முரளிதரன்
ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் உள்ளதை முத்தையா முரளிதரன் வரவேற்றார். மேலும், யுஸ்வேந்திர சாஹல் அணியில் சேர்க்கப்படாதது தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும், அவர் கடந்த சில மாதங்களாக உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் இந்தியாவின் ஒருநாள் அணியில் விளையாடாததால், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் எனக் கூறியுள்ளார். எனினும், வெளியிலிருந்து பல்வேறு நபர்கள் பல கருத்துக்களை கூறினாலும், இறுதியில் அணியில் இருக்கப்போவது 15 பேர் தான் என்றும், தேர்வுக்குழுவை மதித்து, வீரர்கள் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதற்கு ஆதரவளிப்பதுதான் நல்லது என்றும் தெரிவித்தார்.