"உறவினர்கள் பைத்தியம்னு சொன்னாங்க!" LSG வீரர் முகுல் சௌத்ரிக்காக தந்தை செய்த மிகப்பெரிய தியாகம்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வெற்றி பெறச் செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்தவர் முகுல் சௌத்ரி. அந்தப் போட்டியில் 7 இமாலய சிக்ஸர்களை விளாசி அவர் காட்டிய அதிரடிக்கு பின்னால், பல ஆண்டுகால கண்ணீரும், தியாகமும் கலந்த ஒரு கதை ஒளிந்திருக்கிறது. முகுல் சௌத்ரியின் தந்தை தலிப் சௌத்ரி, தனது மகனின் கிரிக்கெட் கனவை நனவாக்க தான் சந்தித்த சொல்லொணாத் துயரங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.
வீடு விற்பனை
மகனுக்காக வீட்டை விற்ற தந்தை
தலிப் சௌத்ரிக்குத் தனது மகன் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது அவர் பிறந்த அன்றே கண்ட கனவாகும். ராஜஸ்தான் நிர்வாகச் சேவை தேர்வில் தோல்வியடைந்த பிறகு, ரியல் எஸ்டேட் தொழிலிலும் அவருக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. போதிய வருமானம் இல்லாத நிலையிலும், தனது மகனின் முறையான கிரிக்கெட் பயிற்சிக்காகத் தான் குடியிருந்த வீட்டை ரூ.21 லட்சத்திற்கு விற்றார். அந்தப் பணத்தை முழுவதும் முகுலின் பயிற்சிக்காக செலவிட்ட அவர், பின்னர் ஒரு ஹோட்டல் தொடங்குவதற்காக மீண்டும் கடன் வாங்கினார்.
சிறை
சிறைவாசம் மற்றும் சமூகப் புறக்கணிப்பு
பொருளாதார நெருக்கடி காரணமாக வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால், தலிப் சௌத்ரி சிறை செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். "நான் தவணைத் தொகையைச் செலுத்தத் தவறியதால் சிறைக்குச் சென்றேன், ஆனால் நான் ஒருபோதும் மோசடி செய்யவில்லை" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரை ஒரு 'பைத்தியக்காரன்' என்று அழைத்து ஏளனம் செய்துள்ளனர். "உன் வாழ்க்கையைத் தான் அழித்துக் கொண்டாய், உன் மகனையாவது நிம்மதியாக விடு." என்று நேருக்கு நேராகவே அவரிடம் கூறியுள்ளனர்.
உறுதியான நம்பிக்கை
நிச்சயமற்ற பயணம்
இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும், முகுல் சௌத்ரியின் திறமை மீது தலிப் வைத்திருந்த நம்பிக்கை துளியும் குறையவில்லை. 2016 ஆம் ஆண்டு சிகார் பகுதியில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் முகுலைச் சேர்த்தது முதல், இன்று ஐபிஎல் நட்சத்திரமாக அவர் ஜொலிப்பது வரை தலிப்பின் ஒவ்வொரு அடியும் ஒரு போராட்டமாகவே இருந்துள்ளது. உறவினர்கள் கைவிட்ட போதிலும், குடும்பத்தின் ஆதரவும் பிடிவாதமும் முகுலை இன்று ஒரு சிறந்த பினிஷராக மாற்றியுள்ளது. ஈடன் கார்டனில் முகுல் அடித்த ஒவ்வொரு சிக்ஸரும், அவரது தந்தை இழந்த ஒவ்வொரு சொத்திற்கும், அனுபவித்த ஒவ்வொரு அவமானத்திற்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.