
லட்சத்தீவு தடகள விளையாட்டில் புதிய புரட்சிக்கு வித்திட்ட 16 வயது சிறுமி முபாசினா முகமது
செய்தி முன்னோட்டம்
16 வயது சிறுமி முபாசினா முகமது, லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் தடகள விளையாட்டில் ஒரு புதிய புரட்சிக்கு வித்திட்டுள்ளார்.
முபாசினா 2022 போபாலில் நடந்த தேசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கம் மற்றும் ஹெப்டத்லானில் மற்றொரு முதலிடத்தை வென்றதன் மூலம், தடகளத்தில் தேசிய அளவிலான பதக்கம் வென்ற முதல் லட்சத்தீவு தடகள வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.
அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு குவைத்தில் நடைபெற்ற ஆசிய இளைஞர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் வெள்ளியன்று (மார்ச் 10) யூத் நேஷனல்ஸில், நீளம் தாண்டுதலில் மற்றொரு தங்கம் வென்றார். மேலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தாஷ்கண்ட் ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
முபாசினா முகமது
மகளின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும் தாய் துபினா
முபாசினாவின் இந்த வெற்றிக்கு அவரது தாய் துபினாவின் பங்களிப்பு மிகப்பெரியது. முபாசினாவின் பயிற்சிக்காக தான் நடத்தி வந்த துணிக்கடையையும் மூடியுள்ளார்.
மகளின் வெற்றி குறித்து பேசிய துபினா, "நான் பள்ளியில் படித்தபோது விளையாட்டில் நன்றாக செயல்பட்டேன். என் பெற்றோர் என்னை தொடர அனுமதித்திருந்தால், லட்சதீவிற்காக நான் முதல் தேசிய பதக்கம் வென்றிருப்பேன். ஆனால், என் கனவை என் மகள் மூலம் நனவாக்கியதில் எனக்கு இன்னும் பெருமையாக இருக்கிறது." என்றார்.
இதற்கிடையே, முபாசினாவின் வெற்றி பயணம் தற்போது லட்சத்தீவு முழுவதும் இளம் பெண்களிடையே விளையாட்டு குறித்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.