IPL 2026: மைதானத்திற்கு வராமல் ஆட்டத்தை மாற்றிய 'தல' தோனி! நூர் அகமதுவின் கம்பேக் பின்னணி
செய்தி முன்னோட்டம்
'தல' எம்.எஸ். தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் இல்லை; காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டிகளில் விளையாடுவதும் இல்லை. சிஎஸ்கே-வின் வெளிமாநில போட்டிகளுக்கு அவர் செல்வதில்லை, ஏன் சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளின் போது கூட அவர் டிரஸ்ஸிங் ரூமில் இருப்பதில்லை. ஆனாலும், சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இப்போதும் தோனியின் 'மாஸ்டர் பிளான்' இருக்கிறது என்பதற்கு நூர் அகமதுவின் ஆட்டமே சாட்சி.
அட்வைஸ்
தடுமாறிய நூர்... கைகொடுத்த தோனி!
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவுக்கு இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடக்க ஆட்டங்கள் மிகக் கடினமாக அமைந்தன. முதல் மூன்று போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறிய நூர், நேற்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 3/21 என அதிரடி காட்டினார். இந்த பெரிய மாற்றத்திற்கு பின்னால் தோனியின் ஒரு சிறிய அட்வைஸ் இருந்ததை சிஎஸ்கே பவுலிங் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் வெளிப்படுத்தியுள்ளார். "நூர் தனது லெக்-பிரேக் பந்துவீச்சில் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், அடிக்கடி கூக்ளி வீசுவதை குறைக்க வேண்டும் என்றும் தோனி அவரிடம் நீண்ட நேரம் பேசினார். அந்தப் பேச்சு அவருக்குப் பெரிய ஊக்கத்தை அளித்தது," என ஸ்ரீராம் கூறினார்.
மென்டர்
சேப்பாக்கத்தில் 'மென்டர்' தோனி
தோனி போட்டிகளின் போது மைதானத்திற்கு வராவிட்டாலும், சேப்பாக்கத்தில் நடக்கும் வலைப்பயிற்சிகளில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார். கேகேஆர் போட்டிக்கு முன்னதாக, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்குடன் இணைந்து நூரின் பந்துவீச்சை தோனி கூர்ந்து கவனித்தார். பயிற்சியின் முடிவில், இளம் வீரரான நூருடன் நீண்ட நேரம் உரையாடி, பந்தை மெதுவாகவும், அதிக சுழலுடனும்(Side spin and drop) வீசுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். கடந்த சீசனில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நூர் அகமது, இப்போது மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளது சிஎஸ்கே அணிக்குக் கூடுதல் பலத்தை அளித்துள்ளது. தொடர்ச்சியான இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள சென்னை அணி, தனது அடுத்த போட்டியில் ஏப்ரல் 18-ம் தேதி ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.