ஒருநாள் உலகக்கோப்பை : இந்தியர்கள் யாரும் செய்யாத சாதனையை செய்த முகமது ஷமி
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டி, 2023 ஐசிசி உலகக்கோப்பையில் முகமது ஷமி களமிறங்கிய முதல் போட்டியாகும். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக களமிறங்கிய ஷமி தனது முதல் போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றினார். இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
நியூசிலாந்துக்கு எதிராக முகமது ஷமியின் செயல்திறன்
நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பையின் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், தனது முதல் பந்திலேயே முகமது ஷமி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங்கை வெளியேற்றினார். அதன் பின்னர் ராச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரை வெளியேற்றினார். மேலும், அவரது கடைசி ஓவரில், மிட்செல் சான்ட்னர் மற்றும் மாட் ஹென்றியை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒருநாள் உலகக் கோப்பைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வீரர் ஷமி மட்டுமே. முன்னதாக, 2019 சீசனில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஆஷிஷ் நெஹ்ரா, வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங், யுவராஜ் சிங், மற்றும் கபில்தேவ் ஆகியோர் ஒருமுறை ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.