ஐபிஎல் 2024இல் பங்கேற்க உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு
2024 ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான சிறந்த தயாரிப்புக்காக மிட்செல் ஸ்டார்க் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஐபிஎல்லுக்கான மெகா ஏலத்தில் அவர் ஒரு அணியால் வாங்கப்பட்டால், 2015க்குப் பிறகு ஐபிஎல்லில் முதல் முறையாக பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார். ஐபிஎல்லில் மிட்செல் ஸ்டார்க் ஒட்டுமொத்தமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இரண்டு சீசன்களில் 27 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டாலும், காயம் காரணமாக அந்த சீசனில் பங்கேற்காமலேயே வெளியேறினார்.
ஐபிஎல்லை இதுவரை புறக்கணித்ததன் காரணம்
தேசிய அணிக்காக விளையாடுவதற்காக ஐபிஎல்லை பலமுறை தியாகம் செய்துள்ள மிட்செல் ஸ்டார்க், ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக இடம் பெற விரும்புகிறார். இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை படைக்க அவர் விரும்புகிறார். முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்காக அந்த மைல்கல்லை எட்டிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 82 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள மிட்செல் ஸ்டார்க், ஆஸ்திரேலியாவின் வரவுள்ள அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றாலும் கூட, 2025-26 சீசனில் தான் இந்த இலக்கை எட்ட முடியும். டெஸ்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், 2024 டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு, தற்போது ஐபிஎல்லில் மறுபிரவேசம் செய்ய தயாராவதாக அறிவித்துள்ளார்.