டென்னிஸில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த 24 வயது இளம் வீரர் மைக்கேல் யெமர்
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரும், உலகின் முன்னாள் 50ம் நிலை வீரருமான மைக்கேல் யெமர் திடீரென தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டென்னிஸ் வீரர்கள் போட்டிகளுக்கு வெளியே 12 மாத காலத்தில் மூன்று முறை ஊக்கமருந்து சோதனையில் பங்கேற்பது கட்டாயம் என விதி உள்ள நிலையில், அவர் சோதனையில் பங்கேற்கவில்லை என கடந்த 2022 ஜனவரியில் குற்றம் சாட்டப்பட்டது. இதை எதிர்த்து மைக்கேல் யெமர் வாதாடிய நிலையில், அவர் மீது குற்றம் இல்லை என 2022 ஜூனில் ஒரு சுயாதீன அமைப்பால் தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும், இதை எதிர்த்து சர்வதேச கூட்டமைப்பு மேல்முறையீடு செய்தது.
டென்னிஸ் விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு தடை
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த விளையாட்டிற்கான நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூலையில் குற்றத்தை உறுதி செய்ததோடு, இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதித்தும், தற்போதைக்கு 18 மாத தற்காலிக தடையை அமல்படுத்தியும் உத்தரவிட்டது. இந்த தடையால் மைக்கேல் யெமர் மிகவும் விரக்தியடைந்த நிலையில், தன் மீது விதிக்கப்பட்ட தடை நியாயமல்ல எனக் கூறி வந்தார். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தற்போது திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரலில், மைக்கேல் யெமர் தனது டென்னிஸ் வாழ்க்கையின் உயர் ரேங்க் 50ஐ எட்டினார் மற்றும் டேவிஸ் கோப்பையில் ஸ்வீடன் அணிக்காக விளையாடினார். சமீபத்திய ஏடிபி தரவரிசையில் 80வது இடத்தில் இருந்தார்.