
'தோனிக்கும் எனக்குமான உறவு' ; முதல்முறையாக மனம் திறந்த யுவராஜ் சிங்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத சிறந்த மிடில் ஆர்டர் பேட்டர்களில் இருவர் யுவராஜ் சிங் மற்றும் எம்எஸ் தோனி ஆவர்.
இருவரும் ஒன்றாக இந்திய அணிக்காக விளையாடி பல கோப்பைகளை அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். மேலும், இருவருமே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டனர்.
இருவரும் ஒன்றாக விளையாடினாலும், இருவருக்கும் இடையேயான உறவு அவ்வளவாக சரியில்லை என்பதே பலரின் கருத்தாக இருந்து வரும் நிலையில், அதுகுறித்து யுவராஜ் சிங் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது என்பதை வெளிப்படையாக கூறுவதில் தனக்கு தயக்கம் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Yuvraj Singh says about his relationship with MS Dhoni
தோனியுடனான உறவு குறித்து யுவராஜ் சிங் கூறியதன் முழு விபரம்
யுவராஜ் சிங் தோனியுடனான உறவு குறித்து கூறுகையில், "நானும் மஹியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை, நாங்கள் கிரிக்கெட் காரணமாக நண்பர்களாக இருந்தோம், ஒன்றாக விளையாடினோம்.
மஹியின் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் வித்தியாசமானது. அதனால் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் இல்லை, நாங்கள் கிரிக்கெட்டினால் மட்டுமே நண்பர்கள்.
நாங்கள் இருவரும் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக இருந்ததால் முடிவு எடுப்பதில் இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன. எல்லா அணிகளிலும் இது இருப்பதுதான்.
களத்தில் அவர் என்னை மிகவும் விரும்பினார். எனக்கு நிறைய உதவியுள்ளார்.
ஆனால், நமது அணி வீரர் என்றால் களத்திற்கு வெளியேயும் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதுதான் யதார்த்தம்." எனக் கூறியுள்ளார்.