உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி பாராலிம்பிக்ஸ் போட்டி தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்க இந்தியா சார்பில் 84 வீரர்கள் பாரிஸ் சென்றுள்ளனர்.
உயரம் தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்றவர்கள்
இந்த நிலையில், ஆண்களுக்கான டி63 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழக வீரர் மாரியப்பன், ஷரத் குமார், சைலேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். அமெரிக்காவின் ஃப்ரெச் எஸ்ரா 1.94 மீட்டர் உயரத்தை தாண்டி தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.
மாரியப்பனின் பதக்க பட்டியல்
தமிழக வீரரான மாரியப்பன் முதன்முதலில் 2016-ம் ஆண்டு பாராலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதனைத்தொடர்ந்து 2020 டோக்யோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது நடப்பு பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மாரியப்பன்.