அடிடாஸ் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை நீடித்தது மான்செஸ்டர் யுனைடெட்
பிரீமியர் லீக் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் சுமார் 900 மில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தத்தில் அடிடாஸ் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு கிட் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது. ஜெர்மன் ஸ்போர்ட்ஸ்வேர் நிறுவனமான அடிடாஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணி இடையேயான தற்போதைய ஒப்பந்தம் 2025 உடன் முடிவடையும் நிலையில், 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சராக அடிடாஸ் 2035 வரை இயங்கும். அடிடாஸ் 1980-1992 இடையேயும் மற்றும் 2015-16 சீசனின் தொடக்கம் முதல் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கிட் ஸ்பான்சராக உள்ளது. அடிடாஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிஜோர்ன் குல்டன், ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணி விற்பனை
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்களாக அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் தற்போது உள்ள நிலையில், அவர்கள் அணியை வேறு தரப்புக்கு கைமாற்று முயற்சி செய்து வருகிறது. நிர்வாகம் மீதான ரசிகர்களின் எதிர்ப்புகள் மற்றும் ஆடுகளத்தில் குறைந்து வரும் அணியின் செயல்திறன் ஆகியவற்றால் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. செவ்வாயன்று (ஆகஸ்ட் 1) முதலீட்டு வங்கியாளர்கள் மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்களுக்கு வழங்கும் ஆலோசனையின் பேரில், முழுமையாக அல்லது குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, மான்செஸ்டர் யுனைடெட் 2013 முதல் பிரீமியர் லீக் பட்டம் எதையும் வெல்லாத நிலையில், சர் அலெக்ஸ் பெர்குசனின் ஓய்வுக்குப் பிறகு அடுத்தடுத்து மேலாளர்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது.