ஐபிஎல் 2024 சீசனுக்கு பயிற்சியாளரை மாற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திட்டம்
ஐபிஎல் 2024 சீசனுக்கு புதிய பயிற்சியாளருடன் களமிறங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவருடனான ஒப்பந்தம் ஐபிஎல் 2023 தொடருடன் முடிந்த நிலையில், எல்எஸ்ஜி கடந்த இரண்டு சீசன்களிலும் ப்ளே ஆஃப்களை எட்டி வெற்றிகரமாக செயல்பட்ட போதிலும், இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது சாத்தியமில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், எல்எஸ்ஜி அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் முன்னணியில் உள்ளார். கிரிக்பஸ் அறிக்கையின்படி, ஜஸ்டின் லாங்கர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே தற்போது இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து இருதரப்பும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பயிற்சியாளர்கள் குழு
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரை மாற்ற முடிவு செய்தாலும், அணியின் இதர பயிற்சி ஊழியர்கள் யாரையும் மாற்ற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கவுதம் காம்பிர் அணியின் வழிகாட்டியாகவும், விஜய் தஹியா உதவி பயிற்சியாளராகவும் தொடர்ந்து செயல்படுவர். மேலும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் பிரவின் தாம்பே போன்றவர்களும் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்வார்கள். தாம்பேயின் கீழ், ரவி பிஷ்னோய் கடந்த சீசனில் சிறந்து விளங்கினார். அதே சமயம் அவேஷ் கான், மார்க் வுட் ஆகியோரும் மோர்கலின் கீழ் நல்ல செயல்திறனை வெளிப்படுத்தினர். கடந்த இரண்டு சீசன்களில் எல்எஸ்ஜிக்கு ஒட்டுமொத்த பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.