பயிற்சியாளர் ஆகமாட்டேன்! சொந்தமாக கிளப் ஆரம்பிக்கப் போகிறேன்; மெஸ்ஸியின் அதிரடி ஓய்வு காலத் திட்டம்
செய்தி முன்னோட்டம்
கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது ஓய்வு காலத் திட்டங்கள் குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார். 38 வயதான மெஸ்ஸி, தான் ஒரு பயிற்சியாளராக மாறுவதை விட, ஒரு கால்பந்து கிளப்பின் உரிமையாளராக இருப்பதையே அதிகம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பயிற்சியாளர்
பயிற்சியாளர் பணி பிடிக்கவில்லை
லூசு டிவிக்கு (Luzu TV) அளித்த பேட்டியில் மெஸ்ஸி கூறுகையில், "எதிர்காலத்தில் என்னை ஒரு பயிற்சியாளராக நான் பார்க்கவில்லை. ஒரு மேலாளராக இருக்கும் எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் எல்லாவற்றையும் விட ஒரு கிளப்பின் உரிமையாளராக இருக்கவே நான் விரும்புகிறேன். அடித்தட்டு மக்களிடம் இருந்து ஒரு கிளப்பைத் தொடங்கி, அதனை வளர்த்து எடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை. சிறுவர்களுக்குத் தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ளவும், வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடையவும் வாய்ப்பளிக்க நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கிளப்
இண்டர் மியாமி உடனான ஒப்பந்தம்
தற்போது அமெரிக்காவின் இண்டர் மியாமி கிளப்பிற்காக விளையாடி வரும் மெஸ்ஸி, சமீபத்தில் தனது ஒப்பந்தத்தை 2028 ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு சீசனில் 28 போட்டிகளில் விளையாடி 29 கோல்கள் மற்றும் 19 அசிஸ்ட்களைப் பதிவு செய்து சாதனை படைத்தார். மேலும், தனது அணியை முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை வெல்ல வைத்து, அந்தத் தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார். 2028 இல் தனது ஒப்பந்தம் முடியும் போது மெஸ்ஸிக்கு 41 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலம்
2026 உலகக் கோப்பை மற்றும் எதிர்காலம்
அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. இருப்பினும், நடப்புச் சாம்பியனான அர்ஜென்டினா அணியில் அவர் இடம்பெறுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். இதற்கிடையில், மெஸ்ஸி ஏற்கனவே இண்டர் மியாமி கிளப்பில் சிறு பங்குகளைக் கொண்டுள்ளார் என்றும், உருகுவேயில் தனது நண்பர் லூயிஸ் சுவாரஸுடன் இணைந்து ஒரு சிறிய கிளப்பைத் தொடங்க உதவியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.