இந்தியாவின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக லல்லியன்சுவாலா சாங்டே தேர்வு
2022-23 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் ஆடவருக்கான சிறந்த கால்பந்து வீரராக லல்லியன்சுவாலா சாங்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மனிஷா கல்யாண் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார். 26 வயதான லல்லியன்சுவாலா சாங்டே, 2016 ஆம் ஆண்டில் ஜெஜே லால்பெக்லுவாவைத் தொடர்ந்து, ஆண்டின் சிறந்த வீரர் விருதைப் பெறும் இரண்டாவது மிசோரம் வீரர் ஆனார். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் 12 முறை விளையாடிய சாங்டே, மும்பை சிட்டி எஃப்சிக்காக கடந்த சீசன்களில் இந்தியன் சூப்பர் லீக், டுராண்ட் கோப்பை மற்றும் சூப்பர் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். பஞ்சாபை சேர்ந்த மனிஷாவைப் பொறுத்தவரை, தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த மதிப்புமிக்க விருதைப் பெறுகிறார்.
சிறந்த வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் தேர்வு
ஆகாஷ் மிஸ்ரா சிறந்த வளர்ந்து வரும் வீரராக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த இந்தியன் சூப்பர் லீக் சீசன் முழுவதும் ஹைதராபாத் எஃப்சிக்கு பத்து கிளீன் ஷீட்களை வைத்திருக்க உதவுவதில் ஆகாஷ் மிஸ்ரா முக்கிய பங்கு வகித்தார். இதற்கிடையில், 16 வயது முன்கள வீராங்கனையான ஷில்ஜி ஷாஜி சிறந்த மகளிர் வளர்ந்து வரும் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷாஜி தற்போது இந்திய யு-17 அணியில் உள்ளார். ஒடிசா எஃப் அணியின் கிளிஃபோர்ட் மிராண்டா, ஆண்டின் சிறந்த ஆடவர் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் இந்திய சர்வதேச வீராங்கனையும், தற்போதைய இந்திய பெண்கள் யு17 அணியின் தலைமைப் பயிற்சியாளருமான பிரியா பாரதி வளப்பில், சிறந்த மகளிர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.