ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கோகி வதனபேயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் லக்சயா சென்
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் குமமோட்டோ நகரில் நடைபெற்று வந்த 'குமமோட்டோ மாஸ்டர்ஸ் ஜப்பான் 2026' (Kumamoto Masters Japan) சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், உள்ளூர் நாயகன் கோகி வதனபேயை (Koki Watanabe) வீழ்த்தி இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார். இன்று (நவ. 15) நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் முதல் செட்டை இழந்தபோதிலும், அபாரமான மன உறுதியுடன் மீண்டு வந்த உலகின் 13-ம் நிலை வீரரான லக்சயா, 1 மணி நேரம் 4 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 13-21, 21-18, 21-14 என்ற செட் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சர்வதேசப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
கம்பேக்
கோகி வதனபேயை வீழ்த்திய கம்பேக்
கடந்த இரண்டு சந்திப்புகளில் கோகி வதனபேயிடம் தோல்வியடைந்திருந்த லக்சயா சென்னுக்கு, இன்றைய இறுதிப்போட்டியின் தொடக்கமும் சவாலாகவே அமைந்தது. ஆக்ரோஷமாக ஆடிய ஜப்பான் வீரர் முதல் செட்டை 21-13 என எளிதில் கைப்பற்றினார்.
ஆனால், இரண்டாவது செட்டில் ஆட்டத்தின் போக்கைத் தன்வசப்படுத்திய லக்சயா, 5-0 என முன்னிலை பெற்று கிராஸ்-கோர்ட் ஸ்மாஷ்கள் மூலம் 21-18 எனச் செட்டை வென்று போட்டியைச் சமன் செய்தார்.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் சோர்வடைந்த வதனபே அடுத்தடுத்துத் தவறுகளை இழைக்க, இடைவேளையில் 11-7 என முன்னிலை பெற்ற லக்சயா இறுதியில் 21-14 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.
தொடர் 2-வது பட்டம்
உலக டூர் ஃபைனல்ஸ் வாய்ப்பு
இந்த மாதத் தொடக்கத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் (Hylo Open) தொடரில் பட்டம் வென்றிருந்த 25 வயதான லக்சயா சென், தற்போது ஜப்பான் மாஸ்டர்ஸ் கோப்பையையும் கைப்பற்றித் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.
இந்தச் சூப்பர் 500 வெற்றியின் மூலம் கிடைத்த 9,200 தரவரிசைப் புள்ளிகளால், உலக டூர் ஃபைனல்ஸ் தகுதிப் பட்டியலில் 12-வது இடத்திலிருந்த லக்சயா 74,180 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறுகிறார்.
வரும் நவம்பர் 17 முதல் 22 வரை நடைபெறவுள்ள ஹாங்காங் ஓபன் தொடரிலும் சிறப்பாக விளையாடி, சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஆண்டு இறுதி உலக டூர் ஃபைனல்ஸ் தொடரில் இடம்பிடிப்பதே தனது அடுத்த இலக்கு என லக்சயா சென் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.