LOADING...
FIFA உலகக்கோப்பையில் எம்பாப்பே புதிய உலக சாதனை: ஸ்வீடனை வீழ்த்தி பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி
FIFA உலகக்கோப்பையில் எம்பாப்பே புதிய உலக சாதனை

FIFA உலகக்கோப்பையில் எம்பாப்பே புதிய உலக சாதனை: ஸ்வீடனை வீழ்த்தி பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 01, 2026
08:18 am

செய்தி முன்னோட்டம்

நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரான்ஸ் அணி, ஸ்வீடனை எதிர்கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி, ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இரண்டு அபார கோல்களை அடித்த பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற தனது சொந்த உலக சாதனையை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

சாதனை

மெஸ்ஸியின் சாதனையை துரத்தும் எம்பாப்பே

உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுகள் என்றாலே எம்பாப்பேவின் ஆட்டம் வேறொரு லெவலுக்குச் சென்றுவிடுகிறது என்பதை இந்த ஆட்டமும் நிரூபித்துள்ளது. ஸ்வீடனுக்கு எதிரான இந்த 2 கோல்களின் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் எம்பாப்பே அடித்த ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை (19 கோல்கள்) நெருங்கியுள்ளார். மேலும், நடப்புத் தொடரில் 6 கோல்களுடன் மெஸ்ஸியுடன் சமநிலை வகிக்கும் எம்பாப்பே, 2 அசிஸ்ட்களை கூடுதலாக செய்துள்ளதால் தற்பொழுது கோல்டன் பூட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். போட்டியின் முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் மைக்கேல் ஒலிசே மற்றும் உஸ்மானே டெம்பேலேவின் சிறப்பான ஆட்டத்தால் கிடைத்த பந்தை, எம்பாப்பே ஸ்வீடன் கோல்கீப்பரை கடந்து துல்லியமாக கோலாக மாற்றினார்.

நெகிழ்ச்சி

பயிற்சியாளரை நெகிழ வைத்த பிரான்ஸ் அணி

முதல் கோலை அடித்தவுடன் எம்பாப்பே மைதானத்தில் வழக்கமான கொண்டாட்டங்களை விடுத்து, நேராகத் தனது மேலாளரும் பயிற்சியாளருமான டிடியர் டெசாம்ப்ஸை நோக்கி ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடித்துத் தழுவினார். சமீபத்தில்தான் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு டெசாம்ப்ஸ் பிரான்ஸ் அணிக்குத் திரும்பியிருந்தார். சோகத்தில் இருந்த தங்களின் பயிற்சியாளருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த பிரான்ஸ் வீரர்களும் மைதானத்தில் ஒன்று கூடி கட்டிப்பிடித்த அந்த நெகிழ்ச்சியான காட்சி, காண்போரை சிலிர்க்க வைத்தது.

Advertisement

ஆட்டம்

ஸ்வீடனை துவம்சம் செய்த பிரான்ஸ்

இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிரான்ஸ் அணி தனது ஆட்டத்தின் வேகத்தை அடுத்த கட்டத்திற்கு மாற்றியது. ஆட்டத்தின் 2-வது பாதியில் மைக்கேல் ஒலிசேவின் அசாத்திய பாஸை பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் விங்கர் பிராட்லி பார்கோலா, பிரான்ஸ் அணியின் 2-வது கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் நடுப்பகுதியில் மீண்டும் ஒலிசேவின் துல்லியமான பாஸைப் பயன்படுத்தி, எம்பாப்பே தனது 2-வது கோலை அடித்து பிரான்ஸின் வெற்றியை 3-0 என உறுதி செய்தார். இது உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் அவரது 9-வது கோலாகும்.

Advertisement