மாவோ சேதுங் சர்ச்சை: சீன ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கிலியன் எம்பாப்பே, விளம்பர ஒப்பந்தங்கள் ரத்து
செய்தி முன்னோட்டம்
சீனாவின் முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங் தொடர்பான மீம் ஒன்றைக் குறித்துப் பேசிய விவகாரத்தில் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சீன மக்களிடம் பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரமும் ரியல் மாட்ரிட் வீரருமான கிலியன் எம்பாப்பே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். எம்பாப்பேயின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து சீனாவில் செயல்பட்டு வரும் மூன்று முன்னணி பெருநிறுவனங்கள் அவருடனான விளம்பர ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்துள்ளன. மேலும், இந்த விவகாரத்திற்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்து சீன ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
மீம்கள்
எம்பாப்பே பேசியதும் உருவான சர்ச்சை
அண்மையில் சமூக வலைதளங்களில் பரவிய காணொளி ஒன்றில், தன்னைப் பற்றி இணையத்தில் வெளியான மீம்கள் குறித்துப் பேசிய எம்பாப்பே, சீன நாட்டின் சர்வாதிகாரி ஒருவரின் உடலில் தனது முகம் மார்பிங் செய்யப்பட்டு வெளியான மீம் தனக்குப் பிடித்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் படத்தில் சீன மக்கள் குடியரசை நிறுவிய மறைந்த தலைவர் மாவோ சேதுங்கின் உடலில் எம்பாப்பேயின் முகம் இணைக்கப்பட்டிருந்தது.
சீனாவில் தேசியத் தலைவராகப் போற்றப்படும் மாவோ சேதுங் குறித்த எம்பாப்பேயின் இந்தப் பேச்சு அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சீன வெளியுறவு அமைச்சகமும் இதற்குத் தனது அதிருப்தியைப் பதிவு செய்ததுடன், சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எச்சரித்தது.
எம்பாப்பே விளக்கம்
சீன நிறுவனங்களின் புறக்கணிப்பு
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, சீனாவின் முன்னணி பான தயாரிப்பு நிறுவனமான ஈஸ்ட்ரோக் பெவெரேஜ், பால் உற்பத்தி நிறுவனமான மெங்நியு மற்றும் சீஸ் தயாரிப்பு நிறுவனமான ஷாங்காய் மில்கிரவுண்ட் ஆகிய நிறுவனங்கள் எம்பாப்பேயுடனான விளம்பர நல்லுறவை உடனடியாக முறித்துக் கொண்டன.
சீன அரசுத் தொலைக்காட்சியானது லா லிகா மற்றும் எம்பாப்பே பங்குபெறும் போட்டிகளின் நேரலை ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.
இச்சூழலில் அறிக்கை வெளியிட்டுள்ள எம்பாப்பே, "எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது; இதன் மூலம் சீன மக்களின் உணர்வுகள் புண்பட்டதை உணர்கிறேன்".
"யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. சீன மக்கள் மீதும் அவர்களின் பாரம்பரியத்தின் மீதும் எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு; இதற்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.