இலங்கை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை (டிசம்பர் 30) வெளியிட்ட அறிவிப்பில், அந்நாட்டு டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக வனிந்து ஹசரங்கவை நியமித்துள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான அணி தயாராகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம், வலது கை பேட்டர் குசல் மெண்டிஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த சரித் அசலங்க, துணைக் கேப்டனாக களமிறங்குகிறார். டி20 தொடரில் ஹசரங்கவிற்கும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மெண்டிஸ் ஆகிய இருவருக்கும் அவர் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். ஹசரங்க கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த லங்கா பிரீமியர் லீக்கின்போது ஏற்பட்ட காயத்தால் அணியிலிருந்து விலகி இருந்த நிலையில், தற்போது அணியில் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் ஜிம்பாப்வே தொடர்
ஜனவரி 6 ஆம் தேதி முதல் இலங்கை கிரிக்கெட் அணி உள்நாட்டில் தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாட உள்ளது. கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் தசுன் ஷனகவிடமிருந்து டி20 கட்டுப்பாட்டை ஹசரங்க ஏற்றுக்கொண்டார். மேலும், நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக ஷனக பாதியில் வெளியேறிய நிலையில் குசல் மெண்டிஸ் கேப்டன் பதவியை ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு அணியில் மாற்றம் செய்யும் வகையில் மெண்டிஸ் மற்றும் ஹசரங்க தொடர்ந்து கேப்டன்களாக செயல்படுவர் எனத் தெரிகிறது.