'இந்திய அணியின் சிறந்த கேப்டன் விராட் கோலி' : இஷாந்த் ஷர்மா புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விராட் கோலி சிறந்த கேப்டன் என்றும், கேப்டன்சியில் அவரது வெற்றிக்கு எம்எஸ் தோனி எப்படி வித்திட்டார் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். ஜியோ சினிமாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இஷாந்த் ஷர்மா, தோனி கேப்டனாக இருந்தபோது, இந்தியா ஒரு மாற்றக்காலத்தில் இருந்தது, ஆனால் கோலி கேப்டன் பொறுப்புக்கு வந்த நேரத்தில்தான், அணி முழுமையடைந்து என்று கூறினார். தோனி 2007இல் ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், 2008இல் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். 2014இல் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தோனி துறந்தபோது அந்த பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 2017இல் தோனி அனைத்து கேப்டன் பொறுப்புகளையும் துறந்தபோது, கோலி முழுமையாக பொறுப்பேற்றார்.
எம்எஸ் தோனியின் கீழ் பல வேகப்பந்துவீச்சாளர்கள் அறிமுகம்
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் பலர், எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் அறிமுகமாகி, கோலியின் கீழ் உச்சம் தொட்டனர் என்று இஷாந்த் ஷர்மா நினைவு கூர்ந்தார். மேலும், கோலியின் திறமை என்பது, அவர் ஒவ்வொரு வீரரின் திறமையையும் சரியாக அடையாளம் கண்டு அதை பயன்படுத்திக் கொள்வதுதான் என்று கூறிய இஷாந்த் ஷர்மா, அதுதான் கேப்டன்சியில் அவரது வெற்றிக்கு காரணம் என மேலும் கூறினார். விராட் கோலி மற்றும் இஷாந்த் ஷர்மா இருவரும் டெல்லியை சேர்ந்தவர்கள் மற்றும் யு19 காலத்தில் இருந்து ஒன்றாக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி 2022இல் அனைத்து வடிவ கேப்டன்சியையும் கைவிட்ட பிறகு ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.