டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கெவின் பீட்டர்சன்; ஐபிஎல் தொடங்குவதற்கு முன் திடீர் விலகல்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பீட்டர்சன், "இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக என்னால் பணியாற்ற முடியாது. இந்தத் பதவிக்குத் தேவையான முழு நேரத்தையும் என்னால் ஒதுக்க முடியவில்லை. வீரர்களுக்கு எனது வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2025 சீசனில் டெல்லி அணியுடன் இணைந்த பீட்டர்சன், தற்போது தனது பணியை முடித்துக்கொண்டுள்ளார். இருப்பினும், ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, இந்த ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனையாளராக மீண்டும் திரும்புவதை உறுதி செய்துள்ளார்.
ஐபிஎல் 2025
2025இல் டெல்லி அணியின் செயல்பாடு
கடந்த 2025 ஐபிஎல் சீசனில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நூலிழையில் பிளே-ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டது. 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்தது. கே.எல்.ராகுல் 539 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 15 விக்கெட்டுகளுடனும் அணியின் தூண்களாக விளங்கினர். வரும் சீசனில் பலமாகத் திரும்புவதற்காக டெல்லி அணி தனது முக்கிய வீரர்களான அக்சர் படேல், கே.எல்.ராகுல், மிட்செல் ஸ்டார்க் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை ஏப்ரல் 1 ஆம் தேதி லக்னோவில் எதிர்கொள்கிறது.