கின்னஸ் சாதனை படைத்த கலைஞர் நினைவு மாரத்தான்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி கௌரவித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த ஜூன் 3ஆம் தேதி தொடங்கியது. இதன் ஒரு அங்கமாக, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. கலைஞரின் நினைவிடத்தில் அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கிய மாரத்தான் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 கிமீ, 10 கிமீ, 21 கிமீ, 42 கிமீ என நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்ட நிலையில், அனைத்து பிரிவுகளும் தீவுத்திடலில் முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கின்னஸ் சாதனை படைத்த கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி
1,063 திருநங்கைகள் உட்பட மொத்தம் 73,206 பேர் பங்கேற்ற இந்த கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இதை தெரிவித்தார். மாரத்தான் மூலம் கிடைத்த ரூ.3.42 கோடி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் என முதல்வர் அப்போது அறிவித்தார். மேலும், அமைச்சர் மா.சுப்பிரமணியனை அதிகம் பாராட்டிய முதல்வர், மா.சுப்பிரமணியன் ஓட்ட நாயகன் என கூறினார். இதற்கிடையே, மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகள் அனைவருக்கும் திமுக இளைஞரணி சார்பாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.