அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு! 2007 உலகக்கோப்பை நாயகன் ஜோகிந்தர் சர்மா அறிவிப்பு!
2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய அங்கம் வகித்த ஜோகிந்தர் ஷர்மா, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3) அறிவித்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜோகிந்தர், தனது முடிவை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "இன்று மகத்தான நன்றியுடனும் பணிவுடனும் அனைத்து வகையான சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். 2002 முதல் 2017 வரையிலான எனது பயணம், குறிப்பாக இந்தியாவை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய காலம் எனது வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத தருணங்கள்." என்று தெரிவித்தார்.
2007 உலகக் கோப்பை நாயகன் ஜோகிந்தர் சர்மா
2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. முதல் இன்னிங்ஸில் இந்தியா 157 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 12வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் என தத்தளித்த நிலையில், மிஷ்பா உல் ஹக் தனி ஆளாக போராடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசி ஒரு ஓவரில் ஒரு விக்கெட் மீதமிருக்க 13 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலைமை உருவாக, கடைசி ஓவரை அனுபவம் இல்லாத ஜோகிந்தர் சர்மாவிடம் தோனி ஒப்படைத்தார். பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என நினைத்த நிலையில், தனது 3வது பந்தில் மிஷ்பாவை அவுட்டாக்கி, இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்து ஜோகிந்தர் ஹீரோவாக மாறினார்.