டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை
ஜோ ரூட் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று தனது 34வது டெஸ்ட் சதத்தை அடித்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்சில் 103 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற அலைஸ்டர் குக்கின் சாதனையை அவர் முறியடித்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சிலும் ஜோ ரூட் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிபிசி சிறப்பு வர்ணனையின் போது அலைஸ்டர் குக், ஜோ ரூட்டை இங்கிலாந்தின் சிறந்தவர் என்று பாராட்டினார்.
எல்லா காலத்திலும் சிறந்தவர்களில் ரூட்
12,000 ரன்களுக்கு மேல், ரூட் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களில் ஒருவராக உள்ளார். அவர் சமீபத்தில் பிரையன் லாராவின் 11,953 ரன்கள் சாதனையை முறியடித்தார். டெஸ்டில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (15,921), ரிக்கி பாண்டிங் (13,378), ஜாக் காலிஸ் (13,289), ராகுல் டிராவிட் (13,288), அலைஸ்டர் குக் (12,472) மற்றும் குமார் சங்ககாரா (12,400) ஆகியோருக்குப் பின்னால், தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். முதல் ஆறு இடங்களில் உள்ள வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது 33 வயது மட்டுமே ஆவதால், ஜோ ரூட் நிச்சயம் டெஸ்டில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.