இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஜே ரிச்சர்ட்சன் நீக்கம்
இந்தியாவில் நடக்க உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் ஜே ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டுள்ளார். பிக்பாஷ் லீக்கின்போது காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது உள்நாட்டு முதல்தர போட்டியில் மீண்டும் தொடையில் காயம் ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால், இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள நாதன் எல்லிஸ், ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜே ரிச்சர்ட்சன் காயத்தின் பின்னணி
பிக்பாஷ் லீக்கின்போது ஜனவரி 4 அன்று ரிச்சர்ட்சனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. காயம் சிறியது என கூறப்பட்டதால், அவர் பிக்பாஷ் லீக் இறுதிப் போட்டிக்கு திரும்புவார் என்று நம்பப்பட்டது. ஆனால் அவர் விளையாடுவதற்கு இரண்டு மாதங்கள் ஆனது. அவர் பெர்த் ஸ்கார்ச்சர்ஸின் பிபிஎல் பட்டம் பெற முடியாமல் போனது. அதன் பிறகு சனிக்கிழமை (மார்ச் 4) ரிச்சர்ட்சன் தனது கிளப் அணியான ஃப்ரீமண்டலுக்காக மீண்டும் களமிறங்கிய நிலையில் நான்கு ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. மீண்டும் காயம் ஏற்பட்டதால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வெளியேறினார். ரிச்சர்ட்சன் கடந்த சில ஆண்டுகளாகவே காயத்தால் அவதிப்பட்டு வருவதால், ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடத்தை தக்கவைக்க போராடி வருகிறார்.