தசைநார் காயத்திலிருந்து மீண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ்: டிசம்பரில் இந்திய அணிக்கு கம்பேக்
செய்தி முன்னோட்டம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட தசைநார் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்து உடற்தகுதி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற தி ஹண்ட்ரட் தொடரில் சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாடியபோது கார்டிஃப் மைதானத்தில் அவருக்கு வலது காலில் கடுமையான தசைநார் கிழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகத் தொடர்ந்து மூன்று மாதங்களாகக் கிரிக்கெட் களத்திலிருந்து ஒதுங்கியிருந்த அவர், தீவிர சிகிச்சைக்குப் பின் மீண்டும் விளையாடத் தயாராகியுள்ளார்.
இன்ஸ்டா பதிவு
தவறவிட்ட முக்கியத் தொடர்கள்
இந்தக் காயம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை, ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சமீபத்தில் உள்நாட்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற தொடர் ஆகியவற்றை ஜெமிமா தவறவிட்டார்.
இந்த மூன்று தொடர்களிலுமே இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடர்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மூன்று மாத தீவிர உடற்பயிற்சி மற்றும் புனர்வாழ்வுக்குப் பிறகு தனது உடற்தகுதி குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள 25 வயதான ஜெமிமா, "மூன்று மாத புனர்வாழ்வுக்குப் பிறகு எனது கால்தசை முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி களத்தில் இறங்க என்னால் காத்திருக்க முடியாது" என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கம்பேக்
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம்
இந்திய மகளிர் டி20 கிரிக்கெட்டில் 2,824 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் சேர்த்த நான்காவது இந்திய வீராங்கனையாக விளங்கும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், இந்திய நடுத்தர வரிசையின் முக்கியத் தூணாகத் திகழ்கிறார்.
கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில்தான் அவர் கடைசியாக சர்வதேச களத்தில் தோன்றினார்.
தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர், வரும் டிசம்பர் மாதம் இந்திய அணி மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மீண்டும் அணியில் இடம்பிடிப்பதை இலக்காகக் கொண்டுள்ளார்.
இத்தொடரில் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.