பார்டர் கவாஸ்கர் டிராபி 3வது டெஸ்ட்: ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் சாதனை படைத்துள்ளார். பிரிஸ்பேனின் தி கபாவில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில், பும்ரா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடையே அதிகமுறை ஐந்து விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இரண்டு ஜாம்பவான்களை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில் அவர் ஐந்து விக்கெட் எடுத்தது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 12வது முறையாகும்.
பட்டியலில் முதலிடத்தில் கபில்தேவ்
ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது 12 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், 11 முறை இந்த சாதனையை செய்திருந்த ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் ஷர்மா மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளனர். இஷாந்த் சர்மா 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், நீண்ட காலமாக அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. எனினும், அவர் இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவை விட அதிக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் கபில்தேவ் மட்டுமே ஆவார். அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 23 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.