
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ஜாஸ்மின் லம்போரியா
செய்தி முன்னோட்டம்
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 2025 உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கம் வென்றுள்ள ஜாஸ்மின், 57 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா செரெமெட்டாவை வீழ்த்தி இந்தப் பதக்கத்தை வென்றார். ஜூலியா, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில், ஜாஸ்மின் ஆரம்பத்தில் முதல் சுற்றில் சற்றுப் பின்தங்கியிருந்தார். ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் சிறப்பாகச் செயல்பட்டு, 4-1 என்ற கணக்கில் ஜூலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
வெற்றி
வெற்றி குறித்து ஜாஸ்மின் நெகிழ்ச்சி
"இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் உலக சாம்பியன் ஆனதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய பிறகு, நான் எனது நுட்பத்தை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மேம்படுத்தினேன். இது ஒரு வருட நிலையான கடின உழைப்பின் விளைவு." என்று ஜாஸ்மின் தனது வெற்றிக்குப் பின் கூறினார். இந்தப் போட்டியில், இந்தியாவின் குத்துச்சண்டை விளையாட்டு வீராங்கனைகள் மூன்று பதக்கங்களை வென்றுள்ளனர். ஜாஸ்மினின் தங்கம் தவிர, நூபூர் 80 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கமும், பூஜா ராணி வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஆனால், இந்திய ஆண் குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் யாரும் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றத்தை அளித்தனர்.