LOADING...
ஐபிஎல் 2026: பஞ்சாப் அணியின் புதிய ஹீரோ! அறிமுகப் போட்டியிலேயே 72 ரன்கள் விளாசிய கூப்பர் கானோலி!
அறிமுக போட்டியிலேயே அசத்திய கூப்பர் கானோலி

ஐபிஎல் 2026: பஞ்சாப் அணியின் புதிய ஹீரோ! அறிமுகப் போட்டியிலேயே 72 ரன்கள் விளாசிய கூப்பர் கானோலி!

எழுதியவர் Vasuki Ravichandran
Apr 01, 2026
07:05 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திப் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் 22 வயது இளம் ஆல்ரவுண்டர் கூப்பர் கானோலி (Cooper Connolly) தனது அறிமுக ஆட்டத்திலேயே 72 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். நேற்று 15 வயது சிறுவன் சூர்யவன்ஷி சிஎஸ்கே-விற்கு எதிராகச் சாதனை படைத்த நிலையில், இன்று மற்றொரு இளம் வெளிநாட்டு வீரர் ஐபிஎல் களத்தில் முத்திரை பதித்துள்ளார்.

மேக்ஸ்வெல்லுக்கு மாற்றா?

கானோலியின் மின்னல் வேக இன்னிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியால் 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கானோலி, தனது முதல் போட்டியிலேயே 3-வது வீரராகக் களம் இறங்கினார். 44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரன் சேஸின் 20-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தரின் பந்தைப் பவுண்டரிக்கு விரட்டி, பஞ்சாப் அணியின் வெற்றியைக் கானோலி உறுதி செய்தார். வெறும் 34 பந்துகளில் அவர் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைக் கடந்தார். கிளென் மேக்ஸ்வெல்லுக்கு ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படும் கானோலி, தனது அதிரடி பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சுத் திறமையால் பஞ்சாப் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார்.

யார் இந்தக் கூப்பர் கானோலி?

உலகக் கோப்பை நாயகன்:

ஆஸ்திரேலியாவிற்காக ஒரு டெஸ்ட் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கானோலி, கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராகக் காலேயில் தனது டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றார். 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து அயர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக விளையாடிய அனுபவம் கொண்டவர். 52 டி20 போட்டிகளில் விளையாடி 870 ரன்கள் மற்றும் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு சிறந்த ஆல்ரவுண்டராகத் திகழ்கிறார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கானோலி மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் ஜொலித்து வரும் நிலையில், கானோலியின் வருகை பஞ்சாப் அணிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.

Advertisement