ஈடன் கார்டன் மைதானத்தில் குல்தீப் யாதவ் சுழல் சூறாவளி! ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்
செய்தி முன்னோட்டம்
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, கே.எல். ராகுலின் அதிரடி அரைசதம் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பால் 203 ரன்கள் குவித்தது. 204 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 163 ரன்களுக்குச் சுருட்டி டெல்லி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றியைப் பதிவு செய்தது. கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த போதிலும், டெல்லி அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.
ஆட்டநாயகன்
மிரட்டல் பந்துவீச்சால் ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவ்
டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி கொல்கத்தாவின் ஒட்டுமொத்த சரிவுக்குக் காரணமானார். ஆட்டத்தின் போக்கை மாற்றிய இந்த அசாத்திய பந்துவீச்சு திறமைக்காகக் குல்தீப் யாதவிற்கு இப்போட்டியின் சிறந்த ஆட்டநாயகன் விருது அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் அஜிங்கியா ரஹானே மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்திய குல்தீப், விக்கெட் கீப்பர் கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டதால் ஹேட்ரிக் விக்கெட்டை நூலிழப்பில் இழந்தார். இந்த ஆட்டநாயகன் விருதுடன் சேர்த்து, நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ் ஒட்டுமொத்தமாக 10 விக்கெட்டுகளுடன் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
புதிய மைல்கல் சாதனை
டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் புதிய மைல்கல்
கொல்கத்தா அணிக்கு எதிராக ரஹானேவின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம், குல்தீப் யாதவ் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது 250-வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 2014 இல் டி20 போட்டிகளில் அறிமுகமான குல்தீப், தனது 201-வது போட்டியில் இந்த 250 விக்கெட்டுகள் என்ற இமாலய மைல்கல்லை எட்டி மாஸ் காட்டியுள்ளார். சர்வதேச டி20 பந்துவீச்சு சராசரியில் 13.74 புள்ளிகளுடன், உலக அளவில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் குல்தீப் யாதவ் நீடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்து, இந்த ஆண்டின் தங்களது ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது.