LOADING...
ஐபிஎல் 2026: கடைசி லீக் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அதிரடி வெற்றி
கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் 2026: கடைசி லீக் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அதிரடி வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
May 25, 2026
06:59 am

செய்தி முன்னோட்டம்

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, கே.எல்.ராகுல், அக்சர் படேல் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடியால் 203 ரன்கள் குவித்தது. 204 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 163 ரன்களுக்குச் சுருட்டி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த போதிலும், மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அந்த அணி தோல்வியடைந்தது.

புதிய சாதனைகள்

மனிஷ் பாண்டே மற்றும் குல்தீப் யாதவ் படைத்த புதிய சாதனைகள்

இப்போட்டியில் 25 ரன்கள் எடுத்ததன் மூலம், மனிஷ் பாண்டே ஐபிஎல் தொடரில் தனது 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை அதிகாரப்பூர்வமாக எட்டியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி கொல்கத்தாவின் சரிவுக்குக் காரணமானார். இப்போட்டியில் ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், குல்தீப் யாதவ் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது 250-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த அதிரடி வெற்றியின் மூலம், டெல்லி அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கே.எல்.ராகுல்

கே.எல். ராகுல் சமன் செய்த விராட் கோலி, ரோஹித் சர்மாவின் சாதனைகள்

டெல்லி அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அணியின் இமாலய ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் அடிக்கும் 6வது அரைசதம் இதுவாகும், இதன் மூலம் விக்கெட் கீப்பராக அதிக அரைசதம் அடித்த வீரரானார். மேலும் ஐபிஎல் தொடரில் தனது 51வது அரைசதத்தைப் பதிவு செய்து, அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை ராகுல் சமன் செய்துள்ளார். இப்போட்டியின் முடிவில் டெல்லி அணி 14 புள்ளிகளுடனும், கொல்கத்தா அணி 13 புள்ளிகளுடனும் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளன.

Advertisement