ஐபிஎல் 2026: CSK ஹோம் கிரௌண்ட் போட்டிகளுக்கான சாத்தியமான வேறு இடங்கள் எவை?
செய்தி முன்னோட்டம்
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 2026-ஆம் ஆண்டு சீசன் ஒரு சவாலான தொடக்கமாக அமையப்போகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக, சிஎஸ்கே அணி தனது ஆரம்பக்கால உள்ளூர் போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மாற்று இடத்தை CSK நிர்வாகம் இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஹோம் கிரௌண்ட் போட்டிகளுக்கான சாத்தியமான வேறு இடங்கள் எவை என தெரிந்துகொள்ளுங்கள்.
காரணம்
இடம் மாற்றத்திற்கு என்ன காரணம்?
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக பாதுகாப்புப் படையினர் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதால், கிரிக்கெட் போட்டிகளுக்குத் தேவையான உச்சகட்ட பாதுகாப்பை வழங்க மாநில அரசால் இயலாது. இதன் காரணமாக, தொடரின் முதல் பாதியில் சிஎஸ்கே தனது 'ஹோம்' போட்டிகளைச் சென்னையிலிருந்து மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, இந்த முறை வலுவான மீண்டெழுதலை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
மாற்று
புதிய மைதானங்கள் எவை?
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சிஎஸ்கே நிர்வாகம் தனது ஹோம் போட்டிகளை ராஞ்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஞ்சி: இது முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சொந்த ஊர் என்பதால், அங்கு சிஎஸ்கே-விற்குப் பிரம்மாண்ட ஆதரவு கிடைக்கும். திருவனந்தபுரம்: சிஎஸ்கே அணியில் உள்ள நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனின் சொந்த மாநிலம் என்பதால், கேரள ரசிகர்களின் பேராதரவைப் பெற இது உதவும். இந்தத் திடீர் மாற்றத்தால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், தோனி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் சொந்த ஊர்களில் சிஎஸ்கே விளையாடுவது அந்தந்த மாநில ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.