
ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsடிசி: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடந்து வரும் 10வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.
அந்த அணி பவர்பிளே முடிவில் 58 ரன்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்டர்களில் டிராவிஸ் ஹெட் மட்டுமே ஓரளவு தாக்குபிடித்து 22 ரன்கள் சேர்த்தார்.
எனினும் அதன் பின்னர் ஹென்ரிச் கிளாசான் மற்றும் அனிகேத் வர்மா ஜோடி நிலைத்து நின்று அணியை மீட்டனர்.
அனிகேத் வர்மா
அனிகேத் வர்மா அரைசதம்
கிளாசான் 32 ரன்களில் அவுட்டான நிலையில், அனிகேத் அபாரமாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.
மத்திய பிரதேச அணிக்காக ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட அனிகேத், அதன் பின்னர் நேரடியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஐபிஎல் 2025இல் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சன்ரைசர்ஸ் அணியில் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன் குவித்த நிலையில், 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மிட்செல் ஸ்டார்க்கிற்கு அவரது ஒட்டுமொத்த டி20 கேரியரில் இதுதான் முதல் ஐந்து விக்கெட் இன்னிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.