ஐபிஎல் 2025 ஏலத்தில் 13 வயது வீரர் பங்கேற்பா? யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2025 ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட நிலையில், பீகாரைச் சேர்ந்த 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சமீபத்தில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி. மேலும், ஐபிஎல் ஏலத்தில் தன்னை பதிவு செய்து, லீக் வரலாற்றில் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில், நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாவது அவரை ஏலத்தில் எடுக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வைபவ் சூர்யவன்ஷியின் பின்னணி
2011 இல் பிறந்த வைபர் சூர்யவன்ஷி தனது 4 வயதில் கிரிக்கெட் திறமையைக் காட்டத் தொடங்கினார். வைபவின் தந்தை சஞ்சீவ் அவரது ஆர்வத்தைக் கவனித்தார் மற்றும் வீட்டின் பின்புறத்தில் அவருக்காக ஒரு சிறிய விளையாட்டுப் பகுதியைக் கட்ட முடிவு செய்தார். 9 வயதில், வைபவின் தந்தை அவரை அருகிலுள்ள நகரமான சமஸ்திபூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சேர்த்தார். இரண்டரை ஆண்டுகள் அங்கு பயிற்சி செய்த பிறகு, விஜய் மெர்ச்சன்ட் டிராபிக்காக 16 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வில் பங்கேற்ற வைபவ், வயது காரணமாக அங்கு காத்திருப்பில் வைக்கப்பட்டார். இதையடுத்து, பீகார் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் விளையாடியபோது அவருக்கு 12 வயதுதான். அதன்பிறகு அவருக்கு ஏறுமுகம்தான்.