ரியாத்தில் நவம்பர் 24, 25 தேதிகளில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடக்க உள்ளதாக தகவல்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2025 சீசனிற்கு முந்தைய மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான தேர்த்திகள் தேதிகள் நவம்பர் 24 மற்றும் 25 ஆக இருக்கும் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த நிலையில், இந்த முறை ரியாத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடப்பது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக, ஐபிஎல் 2020க்கான ஏலம் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல்முறையாக வெளிநாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் பங்கேற்கும் முக்கிய வீரர்களின் பட்டியல்
ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் தத்தமது அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஏல செயல்முறையில் பங்கேற்க உள்ளனர். இது தவிர, ஹென்ரிச் கிளாசென், விராட் கோலி மற்றும் நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்கள் அதிக தொகைக்கு தங்கள் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஜாம்பவான் எம்எஸ் தோனி,குறைந்தபட்சமாக ரூ.4 கோடிக்கு அன்கேப்ட் வீரராக சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் நடக்கும் ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு விருப்பமான வீரர்களை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர். நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் இந்த ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.