இரண்டாவது முறையாக தவறு! ஒட்டுமொத்த அணிக்கும் அபராதம் விதித்தது பிசிசிஐ!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 14) இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய குற்றத்திற்காக 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது முறையாக மெதுவாக பந்து வீசியதால், அணியின் விளையாடும் 11'இல் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு வீரருக்கும் ரூ.6 லட்சம் அபராதம் அல்லது அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களையும் முடிக்க வேண்டிய காலக்கெடுவை மீறியதற்காக புதிய விதிகளின்படி, ஐந்து பீல்டர்களுக்குப் பதிலாக அதிகபட்சமாக நான்கு பீல்டர்களை மட்டுமே வட்டத்திற்கு வெளியே வைத்திருக்க கள நடுவர்கள் கூறினர்.
கள நடுவர்களுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிதிஷ் ராணா
கடைசி ஒரு ஓவருக்கு முன் கள நடுவர்களின் உத்தரவால் அதிருப்தி அடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா, நடுவர்களுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும் கடைசி ஓவரில் அரோரா பந்து வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்டையும் கைப்பற்றியதால் நிதிஷ் ராணா சற்று அமைதியடைந்தார். இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 ரன்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங்கின் அரைசதத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த காலவரிசையைப் பகிரவும்