சிறப்பான ஃபார்மில் நவீன்-உல்-ஹக்! தொடர்ந்து இரண்டாவது முறையாக 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் 2023 தொடரில் 43வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. ஒரு கட்டத்தில் 62/0 என்று இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பின்னர் அடுத்தடுத்து சரிவை சந்தித்தது. லக்னோ அணியில் அமித் மிஸ்ரா மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கிருஷ்ணப்பா கெளதம் ஒரு விக்கெட்டையும் எடுத்த நிலையில், அபாரமாக பந்துவீசிய நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்கு முன்பு நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போதும், நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல்லில் நவீன்-உல்-ஹக்கின் அறிமுகம்
நவீன்-உல்-ஹக் நடப்பு ஐபிஎல் சீசனில் தான் முதல் முறையாக களமிறங்கியுள்ளார். முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், நவீனை எல்எஸ்ஜி அவரது அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கு வாங்கியிருந்தது. ஆனால் எல்எஸ்ஜியின் முதல் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஏப்ரல் 19 அன்று சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் அறிமுகமானார். இதுவரை 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நவீன்-உல்-ஹக் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஆப்கானிஸ்தானுக்காக நவீன்-உல்-ஹக் 2019 இல் அறிமுகமாகி, இதுவரை 27 ஆட்டங்களில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் நவீன்-உல்-ஹக் இதுவரை 167 விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.