குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் : முகமது ஷமியின் பவர்பிளே ஆதிக்கத்தை முறியடிப்பாரா ஜோஸ் பட்லர்
ஐபிஎல் 2023 சீசனின் 48வது போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 5) குஜராத் டைட்டன்ஸ் அணி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் முறையே மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடம் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வரும் முனைப்புடன் உள்ளது. பவர்பிளேயில் ஜாம்பவானாக இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் முகமது ஷமியை, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது ரசிகர்களிடையே சுவாரஷ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
முகமது ஷமி vs ஜோஸ் பட்லர் புள்ளிவிபரம்
டி20 கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக ஜோஸ் பட்லர் 145.71 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். முகமது ஷமி ஜோஸ் பட்லரை மூன்று முறை அவுட்டாக்கி உள்ளார். முகமது ஷமிக்கு எதிராக 70பந்துகளை எதிர்கொண்டுள்ள ஜோஸ் பட்லர் 102ரன்கள் எடுத்துள்ளார். இதில் 35 டாட் பால்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டி20கிரிக்கெட்டில் 3,000ரன்களுக்கு மேல் எடுத்துள்ள ஜோஸ் பட்லர், அதில் இரண்டு பங்கு ரன்களை வேகப்பந்து வீச்சிற்கு எதிராக எடுத்துள்ளார். எனினும் நடப்பு ஐபிஎல்லில் பவர்பிளேயில் ஆதிக்கம் செலுத்தி வரும் முகமது ஷமி, பவர்பிளேயில் 12விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மொத்தமாக 17விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பிள் கேப்பை தன்வசம் வைத்துள்ளார். இருவரும் வலுவான நிலையில் இருப்பதால், போட்டியில் தொடக்கம் பரபரப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.