ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிக விக்கெட் வீழ்த்தியவர்! அஸ்வினை பின்னுக்குத் தள்ளி அமித் மிஸ்ரா சாதனை!
ஐபிஎல் 2023 சீசனின் 43வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா புதிய சாதனை படைத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், அமித் மிஸ்ரா மிகவும் சிறப்பாக பந்துவீசி மூன்று ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை அமித் மிஸ்ரா படைத்துள்ளார். போட்டிக்கு முன், அமித் மிஸ்ரா அஸ்வின் ரவிச்சந்திரன், பியூஷ் சாவ்லா மற்றும் லசித் மலிங்காவுடன் 170 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சம நிலையில் இருந்தார்.
அஸ்வின், மலிங்கா, பியூஸ் சாவ்லாவை பின்னுக்குத் தள்ளிய அமித் மிஸ்ரா
ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் அஸ்வின் ரவிச்சந்திரன், பியூஸ் சாவ்லா மற்றும் மலிங்காவை பின்னுக்குத் தள்ளி, 160 ஐபிஎல் போட்டிகளில் 172 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டுவைன் பிராவோ (183) மற்றும் யுஸ்வேந்திர சாஹல் (178) மட்டுமே இப்போது அவரை விட அதிக விக்கெட் எடுத்தவர்களாக உள்ளனர். இதற்கிடையே அமித் மிஸ்ரா நடப்பு ஐபிஎல்லில், 7.26 என்ற எகானமியுடன் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் மூன்று ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே பவுலர் அமித் மிஸ்ரா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.