Loading...
நிர்வாகிகளுக்கு 70 வயது வரம்பு: புதிய விதிகளைத் திருத்திய இந்திய ஒலிம்பிக் சங்கம்
இந்திய ஒலிம்பிக் சங்கம் தனது அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

நிர்வாகிகளுக்கு 70 வயது வரம்பு: புதிய விதிகளைத் திருத்திய இந்திய ஒலிம்பிக் சங்கம்

எழுதியவர் Vasuki
Sep 09, 2026
07:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) நிர்வாகிகள் மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட 70 வயது உச்சவரம்பு நிர்ணயித்து சங்கத்தின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற ஐஓஏ-வின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த திருத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போதைய ஐஓஏ தலைவர் பி.டி. உஷாவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்து வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விதிகள்

விளையாட்டு அமைச்சகத்தின் விதிகளிலிருந்து மாறுபட்ட முடிவு

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தில், வேட்புமனுத் தாக்கலின் போது 70 வயதுக்கு மிகாமல் இருக்கும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் 75 வயது வரை பதவியில் நீடிக்கலாம் என்ற விலக்கு உள்ளது.ஆனால், திருத்தப்பட்ட ஐஓஏ விதிகளில் இந்த விலக்கு நீக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) விதிகளின்படி 70 வயதுக்கு மேல் கெளரவ உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும் என்பதால், ஐஓஏ சர்வதேச விதிகளை முழுமையாகப் பின்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட பிரிவு 14.3-ன் படி, வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளில் 70 வயதை எட்டிய எவரும் நிர்வாகிகள் அல்லது செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடியாது.

புதிய விதிகள்

பதவிக்காலம் மற்றும் புதிய விதிமுறைகள்

இதற்கு முன்பு இந்த வயது வரம்பு விதி நிர்வாகிகள் பதவிக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இருந்த நிலையில், தற்போது செயற்குழு உறுப்பினர்களுக்கும் இது விரிவாக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய விதிகளின்படி நிர்வாகிகள் அல்லது செயற்குழு உறுப்பினர்கள் ஒரே பதவியில் தொடர்ந்து மூன்று முறை (தலா 4 ஆண்டுகள் வீதம் 12 ஆண்டுகள்) பதவி வகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது; அதன் பின்னரே கட்டாய ஓய்வு காலம் அமலுக்கு வரும்.

முந்தைய விதிகளில் இரு முறை மட்டுமே தொடர்ந்து பதவி வகிக்க அனுமதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT